N'awleans Jazz: Sinkin' in the Rain
'04 ஜூன், 17 11:00 மநிநே.
பிறந்த ஊரைப்போல, படித்த ஊர்களும் நெஞ்சிலே நின்று கொள்கிறன. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் நெ'ஓர்லின்ஸ் அப்படியாகப் பிடித்துக்கொண்டது. பிரெஞ்சுச்சதுக்கம்; தெருவண்டி எனப்படும் 'ட்ராம்'; கேஜன் - க்ரியோல் உணவு; ஜாஸ் - அக்காடியன் இசை; மாடி க்ரா; மிஸிஸிப்பி ஆறு; பொஞ்சட்ரீன் ஏரி; சார்ல்ஸ் வீதிமருங்கு வீடுகளின் கலை; புதைகுழிகள்; ஓடபேன் பூங்கா; உவூடு மந்திரக்காரர்கள் & ஜாஸ் மரணவூர்வலங்கள்; எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் நகரமத்தி ஸுப்பர்டோம் ........................ கூடவே, கோடைகளின் ஓடவைக்கும் தென் திசைப்பெரும்புயல்.
அமெரிக்காவிலே பதிவு செய்யப்பட்ட வரலாற்றிலே மூன்றாவது மிகமோசமான புயலாக, முந்தநாள் கத்ரீனா நெ'ஓர்லியன்ஸினை உலுப்பி எழுப்பியிருக்கின்றது. அடிப்படையிலேயே கொஞ்சம் மழை பெய்தாலும், ஆடிப்போகும் ஊர் நெ' ஓர்லியன்ஸ். பிரெஞ்சுக்காரர், சதுப்புநிலத்திலே துறைமுகவசதிக்காக மிஸிஸிஸிப்பி ஆற்றுமுகத்துவாரத்திலே நிரப்பிக்கட்டிய நகர்; ஒரு புறம் மிஸிஸிப்பி ஆறு; மறு புறம் கடல், மூன்றாவது பக்கம் கடலோ எனப் பிரமிக்கவைக்கும் 24 மைல் நீளத் தொடர்பாலம் குறுக்கோட, பொஞ்சட்ரீன் ஏரி. இவையிடையே, இவற்றின் மட்டத்துக்கு ஆறடி கீழ்த்தாழ, நெ' ஓர்லியன்ஸ் நகர். ஊருக்குள்ளே வரும் நீரை உறுஞ்சி அனுப்ப, ஒன்றோ இரண்டோ மட்டுமே மழைநீரகற்றும் குழாய்களுடனான வசதி; எப்போதும், பெரும்புயலுக்கு, நகர் "கூழ்ப்பானை" (Soup Bowl) என வர்ணிக்கப்படும். ; மேலும், கடல்மட்டத்துக்குக் கீழான நிலையிலே இருப்பதாலே, நிலமட்டத்துக்கு மேலே கல்லறைகளிலே புதைக்கப்படும் பிணங்கள் வெளியே மிதப்பதும் அவற்றினை மீண்டும் எடுத்துப்புதைப்பதும் என்ற மிகவும் மனவழுத்தம் தரக்கூடிய சம்பவங்களும் ஒவ்வோர் ஆண்டிலும் நடக்கும். அருந்தப்பிலே '1998 இலேயும் '2002 இலேயும் நகர் தப்பியது. இந்த முறை அந்தளவுக்குத் தப்பிக்கும் வாய்ப்பிருக்கவில்லையென்றாலுங்கூட, எண்ணியதிலும்விடப் பரவாயில்லையென்ற நிலையிலே ஓரளவு திருப்தியடைந்திருக்கின்றார்கள்.
புயலோடு வரும் அபாயங்கள் காற்றும் மழையும் சம்பந்தப்பட்ட அபாயங்கள்தான்; இவை குறைத்து மதிப்பிடப்படமுடியாது; ஆனால், அதன்பின்னாலே ஆற்றுமண்தடுப்போ, ஏரிமண்தடுப்போ உடைத்தால் வரக்கூடியதுதான் பெருமபாயம்; நேற்றிரவு, பொஞ்சரிட்டன் ஏரியிலே இப்படியாக உடைப்பு நிகழ்ந்திருக்கிறது. இயன்றவரை உடனடியாக, மின்சார, தொலைபேசி வசதிகளை ஏற்படுத்திக்கொண்டாலுங்கூட, வெள்ளத்துடன் குடிநீர்வசதி, கழிவகற்றல் வசதி, நோய்த்தொற்று என்பன பெரிய சிக்கல்களாக இருக்கும்; சரியான அழிவு விபரங்கள், அங்கும் நேரடித்தாக்குதலுக்குட்பட்ட, மிஸிஸிப்பி மாநிலத்தின் ப்லொக்ஸி நகரிலும் மதிப்பிட்டுமுடியவில்லை.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலே இருக்கும் திட்டமிடல் வசதிகளாலே (FEMA போனற அரசமைப்புகளாலே)இவ்வழிவுகள் வளர்முகநாடுகளிலே ஏற்படுவதிலும்விடக் குறைவானதாகவே இருக்குமென்றபோதிலும், "This is our Tsunami" என்றவகையிலே இம்மாநிலத்தார் சொல்வதிலும் உண்மை ஓரளவுக்கு உண்டு; அமெரிக்காவின் வறுமையான மாநிலங்களிலே, தென்திசைக்குடா அடுத்த பெருஞ்சாலை 10 ஊடறுத்தோடும் நெ'ஓர்லியன்ஸ் இருக்கும் உலூயிசியானா மாநிலம், மிஸிஸிப்பி மாநிலம், அதையடுத்த அலபாமா மாநிலங்கள் அடங்கும். கலிபோர்னியா நிலநடுக்கத்துக்கும் மஸாஸுஸெட்ஸ் பனிப்புயலுக்கும் புளோரிடா மழைப்புயலுக்கும் செய்ததுபோல, செலவழிக்கக்கூடிய வசதி இம்மாநிலங்களிடமில்லை. அந்நிலையிலே இம்மாநிலங்கள் மீண்டும் பழையநிலைக்கேனும் நிமிர்ந்தெழுவது மிகவும் பிரயத்தனப்படவேண்டியிருக்கும்.
நெ'ஓர்லியன்ஸுக்கும் அதற்கு மேற்கிலே இடெக்ஸ்ஸாஸ் மாநிலம் நோக்கிப்போகும் உலூசியானாவின் தலைநகரான பட்டன்ரூச்சுக்குமிடைப்பட்ட பிரதேசம், புற்றுநோய்த்துண்டமென, அப்பிரதேசங்களின் வேதியற்றொழிச்சாலைகள் குறித்துக் கருதப்படும்; இவ்வேதியற்றொழிச்சாலைகளும் மெக்ஸிகோகுடாவிலிருக்கும் எரிபொருளகழ்வும் சுத்திகரிப்பும் உலூயிஸியானாவின் சூழலுக்கான அக்கறையுள்ளவர்களினாலே எப்போதும் குற்றம் சாட்டப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. இவ்வேதியற்றொழிச்சாலைகளிலே புயல் சேதமேற்படுத்தின், புயலின் அளவையிட்டும் வேதியமப்பொருளின் தன்மையையிட்டும் பாதிப்பு எவ்வளவு பிரதேசத்திற்கிருக்கும், அந்நிலையிலே எவ்வாறு மக்களை வெளியேற்றுவதென்பதெல்லாம் குறித்து ஆய்வுகள் நிகழ்த்தப்படுகின்றன. ஆனால், ஆய்வுகளின் முடிவுகளின்பின்னான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தனியே அறிவியல், சமூகவியல் மட்டும் சார்ந்த விடயமில்லையே; உள்ளூர் அரசியலும் திறைசேரிப்பொருள்நிலையும் தீர்மானிக்கிற சங்கதிகள் இவை. தற்காலிகமாக, எரிபொருள் உற்பத்தி, சுத்திகரிப்பு, விநியோகம் தடங்கிப்போயிருப்பதால், ஏற்கனவே அமெரிக்காவிலே ஏறிநிற்கும் எரிபொருள்விலை இன்னும் ஏறுமயில் ஏறிவிளையாடும்.
உலூஸியானாவின் தென்மேற்குப்பகுதிகளிலே, அமெரிக்காவின் சீனியுற்பத்தியிலே முக்கியம் வகிக்கும் உலூயிஸியானாவின் கரும்பு விவசாயப்பகுதி. இவை 1992 இன் அண்ட்ரூ புயல் போல இல்லாது, தப்பி, நெ' ஓர்லியன்ஸின் கிழக்குப்பகுதியே சேதமடைந்திருக்கின்றது. ஏற்கனவே இறக்குமதியாகும் சீனியினாலே நொடிந்துபோயிருக்கின்றோமென உலூயிசியானாவின் சீனியுற்பத்தியாளர்கள் ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கையிலே, இப்புயலும் சேதமேற்படுத்தியிருப்பின், மாநிலத்துக்குப் பெரும் பொருளாதாரநட்டமே.
ஆனால், உலூயிசியானாவுக்கு, "தனக்கு வந்தது மிஸிஸிப்பியோடு போனது" என்ற நிலையிலே நிம்மதி.
'05 ஓகஸ்ற், 30 12:00 கிநிநே.