பதினாறிலிருந்து பதின்மூன்றுவரை
பிபிஸி தமிழோசை
16 செப்ரெம்பர் 2005
இலங்கையில் பெண்களின் பாலியல் உறவுக்கான வயதெல்லையைக் குறைக்க முடிவு
இலங்கையில் பெண்களின் பாலியல் உறவுக்கான சட்டபூர்வ வயதை 16 வயதில் இருந்து 13 வயதாகக் குறைப்பது என்று இலங்கை அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
பாலியல் உறவு குறித்து இலங்கையின் இளைய சமுதாயம் மிகவும் விழிப்புணர்வு பெற்றுவருவதாக இலங்கையின் நீதி அமைச்சர் ஜோண் செனிவிரட்ண தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டத் திருத்தத்தின்படி 21 வயதுக்கு உட்பட்ட ஒரு இளைஞன் உண்மையில் ஒரு பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினாரா அல்லது அந்த சிறுமியின் விருப்பத்துடன் அவளுடன் உறவு கொண்டாரா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் சட்டமா அதிபருக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
தமது காதலிகளுடன் பாலியல் உறவு கொண்டதற்காக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்து வருவது குறித்தும் இலங்கை அரசு கவலை கொண்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
அந்தப் பாலியல் உறவு தமது விருப்புடனேயே நடந்ததாகக் கூறி அவர்களை அவர்களது காதலிகள் விடுவிக்குமாறு கோரும் பல சம்பவங்களும் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஆனால் அமைச்சரவையின் இந்த முடிவு குறித்து பெண் உரிமை ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியும் வெளிப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திருத்தங்களினால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோர் தப்பித்துக் கொள்வதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கும் என்று பெண் உரிமைச் செயற்பாட்டாளரான திருமதி தயாபரன் தெரிவித்தார்.
உல்லாசப் பயணிகள் வரும் பட்சத்தில் இந்த சட்டத்திருத்தம் மேலும் நிலைமைகள் சீர்கெட வழி செய்யும் என்றும் அவர் கூறினார்.